Asianet News TamilAsianet News Tamil

சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு..!

மெட்ரோ ரயில் பணிக்காக பூந்தமல்லியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Metro works: Traffic change for 6 months in poonamallee
Author
First Published Sep 6, 2022, 10:03 AM IST

மெட்ரோ ரயில் பணிக்காக பூந்தமல்லியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 4-5-2022 முதல் 3-9-2022 வரையில் பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில்  போக்குவரத்து மாற்றமானது, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து முனையம் செல்ல கனரக வாகனங்களுக்கு (லாரி, டிரக், பேருந்து) அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ், இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
 
* போரூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கரையான்சாவடி சந்திப்பில் வலப்புறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இடதுபுறமாகச் சென்று பேருந்து முனையத்தை அடைய வேண்டும். பேருந்து அல்லாத இதர வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் இருந்து வலது புறம் சென்று, சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கையடைய, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். 
 
*  மாநகர பேருந்துகள் குமணன்சாவடி வழியாக சென்று கரையான்சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறம் சென்று பூந்தமல்லி பேருந்து முனையத்தை அடைய வேண்டும். இதர அரசு போக்குவரத்துக்கழக பேருந்து வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் சவீதா பல் மருத்துவமனையில் இருந்து நேராக புறவழிச்சாலை வழியாக, பூந்தமல்லி பாலத்தை சென்று தங்கள் இலக்கை அடையலாம். மாங்காட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்கள்: 
 
*  அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கரையான் சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று, பூந்தமல்லி புறவழிச்சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பேருந்து முனையத்தை அடைய வேண்டும். பேருந்து அல்லாத இதர வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் மாங்காடு சந்திப்பில் இருந்து வலதுபுறம் சென்று சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய பூந்தமல்லி புறவழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். 
 
*  பருத்திப்பட்டில் இருந்து ஆவடி சாலையில் பூந்தமல்லி நோக்கி வரும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை - பெங்களூரு பூந்தமல்லி புறவழிச்சாலையில் வலது அல்லது இடதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். நேராக கரையான் சாவடி நோக்கி செல்லக் கூடாது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டையில் இருந்தும், ஓ.ஆர்.ஆர் வெளிவட்டச் சாலையில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் வழக்கம்போல் பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்லலாம். வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி பேருந்து நிலைய நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து பிஎஸ்என்எல் அருகில் இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி புறவழிச்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

* பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் பாரிவாக்கம் சாலை வழியாக பூந்தமல்லி புறவழிச்சாலைக்கு சென்றடைய வேண்டும். நசரத்பேட்டை திருவள்ளூர் மார்க்கமாக அல்லது ஓ.ஆர்.ஆர் வெளிவட்டச் சாலை வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் பாரிவாக்கம் சாலை, பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சென்று தங்கள் இடத்தில் இலக்கை அடையலாம். போரூர், மாங்காடு மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச்சாலையில் வலது புறம் திரும்பி சவீதா பல் மருத்துவமனை சென்று, மீண்டும் வலது புறம் திரும்பி குமணன்சாவடி சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஆவடி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச்சாலையில் சென்னீர்குப்பம் சென்று இடது புறம் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
 எனவே, பொதுமக்கள்  பணியினை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios