பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வாரியம் அவ்வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அவ்வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள உத்தரவில்,  குடிநீர் வடிகால் வாரியத்தில் பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகளை அடையாளம் கண்டு அதை அடுத்த  24 மணி நேரத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என அதரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ஆங்காங்கே பரவிவிரவிகிடக்கும்  கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இதுபோல் மழைநீர் சேகரிப்பு  கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும்,  தங்கள் பகுதியில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து பொதுமக்கள்  94458- 02145 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் ,  உடனே அடுத்த 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுத்து அவ் ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து,  தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும் என தமிழக முதலமைச்சர் பொதுமக்களையும்  அதிகாரிகளையும்  கேட்டுக்கொண்டுள்ளார்.  அது குறித்து இன்றுகாலை அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தார். இதேநேரத்தில் பல்வேறு தனியார் அமைப்புகள்,  மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆங்காங்கே  கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுவருகிறது. இந்நிலையில் இது போன்ற ஒரு விபத்து இனியும் நடக்கக்கூடாது என்பதால் ஆங்காக்கே உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரசும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக 

ஆழ்துளை கிணறுகளை மூடச் செய்வதுடன் அதை பயனுள்ள முறையில் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  திட்டமிட்டுள்ளது. எனவே ஆழ்துளை கிணற்றில் மண்போட்டு மூடுவதால் பலன் ஏற்படாது என்பதால் அவைகளை  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றுவதன் மூலம் விபத்துக்களை தடுப்பதுடன்  நிலத்தடி நீரை மட்டத்தை பெருக்க முடியும்  என்பதே இதன் நோக்கமாகும்.