மத்திய அரசு கடந்த வாரம் நேஷனல் மெடிக்கல் கவுன்சில் என்ற மசோதாவை கொண்டு வந்தது. இதனால் 4 ஆண்டுகள் மருத்துவ படிப்பு முடித்த மாணவ மாணவிகள், நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுதி வெற்றி பெற்றால்தான் அவர்கள் மருத்துவராக அங்கீகரிக்கப்படுவர் என குறிப்பிடப்படுகிறது.

இந்த நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு மற்றும் 3ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாசலில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இவர்கள், கடந்த சில நாட்களாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ‘‘மருத்துவ கல்வியை முழுமையாக வணிக மயமாக்கும் தேசிய கல்வி கொள்கை 2019ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. எங்கள் கோரிக்கைளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு தரப்பில் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் எங்களை அழைக்கவில்லை. உடனடியாக எஙகளுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ெசவிசாய்க்க வேண்டும்,’’ என்றனர்.