பாமக மகளிர் அணி தலைவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த கைனூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் நிர்மலா (42). அரக்கோணம் நகர பாமக மகளிர் அணி தலைவி. அரக்கோணம் தாசில்தார் தெருவில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். தாய் படவேட்டம்மாளுடன் வசித்தார்.

நேற்று இரவு நிர்மலா, தனது தாய் படவேட்டம்மாளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனால், அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது நிர்மலா தலையில் படுகாயத்தோடு, ரத்த வெள்ளத்தில் படுக்கையில் சடலமாக பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரிந்தது. அருகில் அவரது தாய் படவேட்டம்மாள் காயத்துடன் மயங்கி கிடந்தார்.

தகவலறிந்து அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த படவேட்டம்மாளை சிகிச்சைக்காகவும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  நிர்மலா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது நிர்மலாவின் செல்போன் மற்றும் மொபட் காணாமல் போனது தெரியவந்தது. தடயவியல் துறையினர் கைரேகைகளை பதிவு செய்தனர்.

கொலை சம்பவம் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் அம்மிக்கல் ரத்த கறையோடு கிடந்தது. இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.