மாமல்லைபுரத்தில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு நடப்பதை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வரை அங்கு பாதுகாப்புப் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.
ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
ஜி20 நாடுகள் மாநாட்டில் ஒரு பகுதியாக இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் பெண் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ 20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் நிறைவு அமர்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கெடுத்து சிறப்புரை வழங்க இருக்கிறார். இந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களைப் பார்வையிட வருகின்றனர்.
கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
அதைத் தொடர்ந்து ஜூன் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஜி20 நாடுகளின் மற்றொரு கூட்டமும் நடக்கிறது. அதில், ஜி20 அமைப்பின் பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டகளிலும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 300 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வரும் 21ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் வான்பகுதியில் டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக ஒரு சிறப்பு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.