13 மாவட்ட சவுடு மண் அள்ளுவதற்க்கு தடை உள்ள வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் என  மதுரை உயர்ந்திமன்ற கிளை தெரிவித்துள்ளது.  13 மாவட்டத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு தடை விதித்த நீதிபதிகளின் அமர்வில் வழக்கை பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக் குட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றி ஜமீன்தார் வலசை,  தமிழர்வாடி  சமத்துவபுரம், சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் கிழக்குக் கடற்கரை பகுதியில் இருந்து 800 முதல் 1000 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.  இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இந்நிலையில் அதிகாரிகள் சட்டவிரோதமாக இந்த கிராமங்களில் மணல் எடுத்து வணிகரீதியில் விற்பனைசெய்து வருகின்றனர்.

 

இது கனிமவள விதிக்கு எதிரானது,  அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் பொக்லைன் மூலமும் 15 அடி வரை ஆழமாக தோண்டி மணல் எடுக்கின்றனர் இதனால்  நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் உட்புகும் நிலை உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  இதுதொடர்பாக நடவடிக்கை கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் சவுடு மண் எடுப்பதற்கான அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,  எனவும்.  வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி அன்று  மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி தான் தொடர்ந்த  பொதுநல வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.  அதற்கான காரணங்களை விசாரணை செய்த நீதிபதிகள் மனுவை வாப்பஸ் பெற முடியாது வேண்டும் என்றால் மனுதார்ரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்றோம் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை  நீதிமன்றம் தாமாக முன்வந்து  விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கை விசாரித்த முந்தைய நீதிபதிகள் அமர்வில் வழக்கை பட்டியலிட நீதிமன்ற பதிவளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.