Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் தேர்வு மோசடி: படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்த சென்னை பல்கலைக் கழகம்.!

20 வருடங்களுக்கு மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட வாய்ப்பை நூற்றுக்கும் மேற்பட்டோர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madras university bust 117 ghost graduates - students exploit arrear exam options
Author
Chennai, First Published Dec 22, 2021, 9:23 AM IST

20 வருடங்களுக்கு மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட வாய்ப்பை நூற்றுக்கும் மேற்பட்டோர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்றன. கிருமி தொற்று பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வந்துள்ளது.

Madras university bust 117 ghost graduates - students exploit arrear exam options

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து ஆல் பாஸ் நடைமுறையை அறிவித்தார். அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களும் பாஸ் என்ற அவரது வரவேற்புக்கு கல்லூரி மாணவர்கள் கட் அவுட் வைத்து வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், பல்கலைக் கழக மானியக் குழு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், மாணவர்கள் ஆன்லைன் வழியாக தேர்வு எழுத உத்தரவிட்டது.

கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. மாணவர்கள் இணையதளத்தில் இருந்து பதில்களை தேடி காப்பி அடிப்பதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர். இதன் காரணமாகவே தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் தேர்வில் சலுகை கண்ட மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தார்கள் என்று மட்டுமே நினைத்திருந்த வேளையில் சென்னை பல்கலைக் கழக தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 2020ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் செமஸ்டர் தேர்வில், தொலைதூரக் கல்வி மூலம் பயின்று 20 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக் கழகம் வாய்பு அளித்தது.

Madras university bust 117 ghost graduates - students exploit arrear exam options

சென்னை பல்கலைக் கழகத்தின் அறிவிப்பை பயன்படுத்தி அரியர் மாணவர்கள் பலரும் ஆன்லைனில் தேர்வு எழுதினர். ஆனால் இந்த அறிவிப்பை முறைகேடாக பயன்படுத்த முயன்ற பல தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், எந்த பட்டப் படிப்பிலும் சேராத மாணவர்களை, தேர்வு எழுத வைத்துள்ளனர். பட்டப்படிப்பில் சேராமலும், படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 மாணவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். ஆன்லைன் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, தொலைதூரக் கல்வி மூலம் தேர்வு எழுதியவர்கள் விவரங்களை சென்னை பல்கலைக் கழகம் ஆய்வு செய்தது. அதில், 117 பேருக்கு செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றில் மாறுபட்ட தகவல்கள் இருந்ததால் படிக்காமலேயே பட்டம் பெற முயன்றவர்கள் சிக்கிக்கொண்டனர்.

ஆன்லைன் தேர்வை முறைகேடாக பயன்படுத்திய தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற ஒவ்வொருவரிடமும் தலா மூன்று லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து சென்னை பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் முறைகேடாக வேறு யாரும் தேர்வு எழுதியுள்ளார்களா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்தும் சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios