சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ், கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு  மரணமடைந்தார். இவரது உடலை, கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, கொரோனா வைரஸ் குறித்து தவறான புரிதலால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாக்டரின் உடலை அருகில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சைமன் குழுவின் மனைவி ஆனந்தி சைமன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட தன் கணவர் உடலை தோண்டி எடுத்து,  கிறிஸ்தவ மத கல்லறை தோட்டமான,  கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யவேண்டும் என்ற  கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிராகரித்து விட்டது .எனவே என் கணவரின் உடலை கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்துவ மத சடங்குகளை நடத்தி  மறு அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு சுடுகாட்டில் இருந்து டாக்டரின் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 31ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கொரோனா  வைரஸ் தொற்றினால்  இறந்தவரின் உடல் தொற்று தன்மை கிடையாது என்று  மருத்துவ அறிக்கைகள் கூறப்பட்டுள்ளன.


அதனால் உரிய விதிகளை பின்பற்றி டாக்டரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய வேண்டும். அப்போது அவரது குடும்பத்தினர் மத சடங்குகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி ஆணையர் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , ஆர்.என் மஞ்சுளா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் வழக்கு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதனால் வழக்கு விசாரணை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.