தொடர்ந்து அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; 16ம் தேதி முதல் பள்ளிகளில் கண் பரிசோதனை - அமைச்சர் தகவல்
சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் அலற்சி நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற 16ம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ கண் அழற்சிநோய் வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் கண் சிகிச்சைகள் குறித்து இன்று கேட்டு அறியப்பட்டது.
பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம் என்று கூறிய அவர் மெட்ராஸ் ஐ சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது, சென்னை மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், புது டெல்லி வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே இந்த நோய் பாதிப்பு கூடுதலாகி உள்ளது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் இந்த மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பு இது போன்ற நோய் வரும் பொழுது நூற்றுக்கணக்கான பேருக்கு இந்த நோய் வரும். முதல்வரின் விழிப்புணர்வின் காரணமாக தற்போது நூறுக்கும் கீழ் தான் இந்த நோய் பாதிப்பு இருக்கிறது.
காலை உணவு திட்டத்தில் சாதிய பாகுபாடு? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி
எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ-க்கு என்று தனி வார்டு உள்ளது, இந்த நோய் இருப்பவர்களுக்கு கண் சிவந்து போய் இருக்கும். கண்களில் நீர் வழியும், கண்களில் எரிச்சல் ஏற்படும். கண்களில் அரிப்பு ஏற்படும். இதுதான் மெட்ராஸ் ஐ வருபவர்களுக்கு அறிகுறியாக இருக்கும். இந்த நோய் பருவநிலை மாறுபாடு மற்றும் ஒரு வகையான வைரசால் வருகிறது. மெட்ராஸ் ஐ ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் தொற்றிக் கொள்ளாது. குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் மற்றவருக்கு வர வாய்ப்பு உள்ளது. கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐ காண மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. 420 மருத்துவர்களைக் கொண்டு இந்த நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை உதவியாளர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளனர். மெட்ராஸ் ஐ குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு அரசு இந்த நோய் குறித்து முறையாக கண்காணித்து வருகிறது. முறையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான மருந்துகள் போதுமான அளவிற்கு மருத்துவமனைகளில் உள்ளது.
வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி; அமைச்சரின் உதவியாளர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 12 லட்சம் படித்து வருகிறார்கள், இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் இந்த மாதம் கண் பரிசோதனைகளை செய்யலாம் என்று தமிழ் நாடு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்கள் வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் 400 கண் மருத்துவர்கள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவர்களையும் வைத்து கொண்டு 12 லட்சம் பேருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சென்னையில் சுகாதார சீர்கேடு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் கேள்விக்கு, சென்னையை சிங்கப்பூர் மாதிரி எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்தாரா? சுகாதார சீர்கேடு தொடர்பாக கொஞ்சம் கூட பேசுவதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.