மழை மற்றும் வெயில் காலங்களில் கண்களை பாதிக்கக்கூடிய ;மெட்ராஸ் ஐ' என்னும் நோய் அதிகமாக பரவும். மார்ச், ஏப்ரல், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருக்கும். இதனிடையே  தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் சென்னை பகுதியில் இந்த நோய் பரவி வருகிறது. சென்னையில் இருக்கும் எழும்பூர் அரசு மருத்துவமனையில் தினமும் 20 பேர் வரையிலும் 'மெட்ராஸ் ஐ' யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடினோ என்னும் வைரஸ் கிருமியால் கண்கள் தாக்கப்படுவதால் இந்த நோய் உருவாகிறது. 'மெட்ராஸ் ஐ' யால் பாதிக்கப்பட்டால் இரண்டு கண்களும் சிவந்துவிடும். கண்கள் உருத்தி அதிகமான நீர் வெளியேற்றம் இருக்கும். இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றும் நோய் என்பதால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் துண்டு, சோப்பு, படுக்கை விரிப்பு உள்ளிட்ட துணிகளை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் மூலம் கிருமி பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

குழந்தைகள் கண் நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை பள்ளி அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இந்த நோயை குணப்படுத்த நேரடி மருந்துகள் கிடையாது என்பதால் மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகள் வாங்க கூடாது. கண் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற்று அவரின் அறிவுரைபடியே மருந்துகள் உபயோகிக்க வேண்டும். வெளியே செல்லும் போது சூரிய தாக்கங்களில் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் கண்ணாடி அணிதல் வேண்டும். 

இந்த நோயின் மூலம் அதிகமாக பரப்பப்படும் வதந்தி, 'மெட்ராஸ் ஐ' யினால் பாதிக்கப்பட்டவர்களை நேருக்கு நேர் பார்த்தால் நமக்கும் கண் நோய் தொற்றிக்கொள்ளும் என்பது. ஆனால் அது உண்மையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உபாயகப்படுத்தும் பொருட்களினால் மட்டுமே இந்த நோய் பரவும்.