எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (33). லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், கணவனை இழந்த ஆரோக்கியமேரி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆரோக்கிய மேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆரோக்கியமேரி வேலைக்கு சென்றுவிட்டார். முருகன் நேற்று வேலைக்கு போகவில்லை.

இந்நிலையில், வீட்டில் திடீரென முருகன் அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, முருகன் கை, கால், தலை போன்ற இடங்களில் பயங்கர வெட்டுப்பட்டு ரத்தம் வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனே இதுகுறித்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் முருகன் சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுபற்றி நடத்திய விசாரணையில், முருகன் சிலருடன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகறாரில் முருகனை கொலை செய்தது அன்னை சிவகாமி நகர் 9வது தெரு சேர்ந்த ஆரோக்கியமேரியின் மகன் நரேஷ் (23), மருமகன் மரியதாஸ் (38) ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.

எண்ணூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் இருவரையும் பிடிக்க அன்னை சிவகாமி நகருக்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தபோது, நரேஷ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் நரேசை தடுக்க முயன்றபோது அவரது வயிற்றிலும் கத்திபட்டு காயம் ஏற்பட்டது.

இதில் இருவருக்கும் ரத்தம் வெளியேறி துடித்தனர். அருகிலிருந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். நரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, அன்னை சிவகாமி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் இயேசு (50) லாரி டிரைவர். இவரது மனைவி ஆரோக்கியமேரி இவர்களுக்கு ரோஸ்லின் ராணி என்ற மகளும், நரேஷ் என்ற மகனும் உள்ளனர். ரோஸ்லின் ராணி மரியதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட முருகன் இவர்களுக்கு குடும்ப நண்பர்.

இதனால் இவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இயேசு திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஆரோக்கியமேரிக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசினர். இதை தெரிந்து கொண்ட ஆரோக்கியமேரி மகன் நரேஷ், மருமகன் மரியதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி ஆரோக்கியமேரி கடந்த ஆண்டு தன் குடும்பத்தை விட்டு வெளியேறினார். பின்னர் முருகனுடன் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இதை தனது குடும்பத்திற்கு அவமானம் என்று கருதிய நரேஷ், மருமகன் மரியதாஸ் ஆகிய இருவரும் பிரச்சனைக்கு காரணமான முருகனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, நேற்று மதியம் முருகன் எர்ணாவூரில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். இதை தெரிந்துகொண்ட நரேஷும், மரியதாசும் அங்கு சென்று முருகனுக்கு அருகிலேயே அமர்ந்து மது அருந்திதனர்.

அப்போது இருவரும் முருகனிடம் நைசாக பேசினர். மது அருந்தி முடித்ததும் போதையில் மூன்று பேரும் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள முருகனின் வீட்டுக்கு வந்தனர். உள்ளே வந்ததும் கத்தியால் சரமாரியாக முருகனை வெட்டி விட்டு நரேஷும், மரியதாசும் அங்கிருந்து தப்பி சென்றனர். என்பது தெரியவந்தது. இதையடுத்து மரியதாசை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.