முதலியார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் யாரும் வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சுகாதார மையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்யூர் தாலூகா இடைக்கழிநாடு பேரூராட்சி முதலியார்குப்பம் கிராமம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில், துணை சுகாதார மையம் அமைந்துள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த சுகாதார மையத்தில் விபத்துகள் மற்றும் விஷபூச்சி கடிகளுக்கு முதலுதவி வழங்குதல், சர்க்கரை, காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குதல், கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் தோறும் உடல் பரிசோதனை மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த சுகாதார மையத்தில் நியமிக்கப்பட்ட ஒரேவொரு செவிலியர் மட்டுமே பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த சுகாதார மையத்தால் ஓதியூர், முதலியார் குப்பம் நைனார் குப்பம், தழுதாலிக்குப்பம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இங்கு பணிபுரிவதற்கு, செவிலியர்கள் வரவில்லை. இதனால் மேற்கண்ட சுகாதார மையம் எந்நேரமும் பூட்டியே கிடப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.