தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் கூறுகையில்;- கொரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள  சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

மேலும், பேசிய மருத்துவக்குழு கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.  தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. 

சென்னையில் கூடுதல் தளர்வுகளை அறிவித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரும்பல், சளி, காய்ச்சல் இருந்தால் தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும் - பயத்தை கிளப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.