உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறைகளின் பணிகள் முடங்கியிருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவு பெற்றது. ஆகையால் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று உள்ளாட்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.