ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2-ம் தேதி வெளியிட தடையில்லை என கூறி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன. இப்போது, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. 

ஆகையால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் பதிவு நடைபெற்றாலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளருது என மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக, நகர்ப்புற அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.