தமிழகத்தில் போதிய ஆதரவும், வருவாயும் இல்லாததால் ஆடித்திருவிழா காலங்களிலும் தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்க்கை பொலிவிழந்து வருகிறது.தெருக்கூத்து என்பது தமிழர்களின் தொல்மரபு கலைவடிவம். இன்றைக்கு வழக்கத்தில் இருக்கும் தெருகூத்து குறைந்தது 300 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரிதும் வழங்கப்படுவது ஆதி கலையான தெருக்கூத்து கலை.திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டிவனம், செய்யாறு, வேலூர், தருமபுரி, சேலம் என பல மாவட்டங்களில் பல நூற்றாண்டு காலமாக இந்த தெருக்கூத்து நாடகத்தை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் திருவாலங்காடு, பட்டரைபெரும்புதூர், நெடும்பரம், நெமிலி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இக்கலைகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர்.பங்குனி, ஆடி மாதங்களில் கிராமத் திருவிழாக்களின்போது தெருக்கூத்துக் கலைகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.

இந்த தெருக்கூத்து கலை தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. தெருக்கூத்தின் தோற்றம் எப்படி இருந்தாலும் வட மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடத்தை பிடித்து இருந்தது.தமிழகத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் சடங்குகளில் தெருக்கூத்து முக்கிய இடம் பிடிக்கும். தெருக்கூத்தில் பெரும்பாலும் மகாபாரத கதைகள் அடிப்படையாக இருக்கும். புராணம், பக்தி கதைகள் ஆகியவற்றை மையமாக வைத்தும் இந்த தெருகூத்துகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த தெருக்கூத்து நாடகங்களில் அர்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், குறவஞ்சி, கர்ணமோட்சம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடக கதைகள் உள்ளன.தெருக்கூத்து கலையை கற்றுக் கொள்பவர்கள் ஆட்டம், பாட்டு, வசனம் என அனைத்தையும் முழுமையாக கற்றுக் கொண்டு தெருக்கூத்து நாடகத்தை நடத்துகின்றனர். மேலும் அர்சுனன் வேடம் போடும் நபர் 15 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு அர்சுனன்தபசு மரம் ஏறி தனது விரதத்தை முடிப்பார்.

அப்போது கருடன் மேகத்தில் சுற்றிவரும். இது தெருகூத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தெருக்கூத்து கலை தமிழர்களின் பாரம்பரிய மரபில் தாக்கம் கொண்டது. தெருக்கூத்து நிகழ்ச்சியில் முகவீனை, ஆர்மோனியம், மத்தளம், தாளம் ஆகிய இசை கருவிகளுடன், 25 நபர்களை கொண்ட குழுவாகவே தெருக்கூத்து நடத்துகின்றனர்.மேலும் தெருக்கூத்து கலைஞர்கள் புஜக்கீர்த்திகள், கிரீடங்கள், மார்பு பதக்கம், கால் சலங்கை ஆகிய பொருட்களை தங்கள் உடலில் 32 இடங்களில் முடிச்சிபோட்டு கட்டி கூத்தில் பங்கேற்கின்றனர்.

எனவே திறமையானவர்கள் மட்டுமே தெருக்கூத்தில் இடம்பெற முடியும் என்பது வெளிப்படையான உண்மை என்று இந்த கலைஞர்கள் கூறுகின்றனர்.மேலும் தெருக்கூத்துகள் பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 11 மணிவரை நடைபெறும். திரவுபதி அம்மன் திருவிழா மட்டுமின்றி இறந்தவரின் காரியசடங்கு, வீட்டின் மீது இடிதாக்குதல் போன்றவைகளுக்கும் தெருகூத்து நடத்தப்படுகிறது. இவ்வாறு மக்களின் சந்தோஷம் மற்றும் துக்கத்தில் ஒன்றி கலந்த இந்த தெருக்கூத்து கலை இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

தற்போது சினிமா, தொலைக்காட்சி முதலான நவீன ஊடகங்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி விட்டதால் தெருக்கூத்து மவுசு குறைந்து விட்டது. இதனால் தெருகூத்து கலைஞர்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இன்றைய திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் வரவால் தெருக்கூத்தை நம்பியிருந்த தெருக்கூத்து கலைஞர்கள் வீதிக்கு வந்துவிட்டனர். இப்போது வாழவழியின்றி பஞ்சம் பிழைக்க கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு சென்று கட்டிட வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் கூட அண்டை மாநிலத்தின் செண்டைமேளம் இடம் பெறுகிறது. அதிலாவது, தமிழர்களின் பாரம்பரிய ஆதிகலையான தெருகூத்து இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெருக்கூத்து கலைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல் அரசின் நிதியுதவி, கலைநிகழ்ச்சிகளுக்கு உதவிகள், பயணசலுகை, நிகழ்ச்சி வாய்ப்பு என எல்லாவற்றிலும் அரசால் வஞ்சிக்கப்படுகிறவர்களாகவே தெருகூத்து கலைஞர்கள் உள்ளனர். எனவே, தெருகூத்தை மீட்டெடுக்க அரசு முன் வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.