மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜவாதி சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தலைநகர் டில்லியில் கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த மசோதாவிற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் நாளையிலிருந்து 23ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள், வகுப்புகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே டிசம்பர் 24ம் தேதியில் இருந்து ஜனவரி 1ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு மேலாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.