சங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, திடீர் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டம் சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வழக்கறிஞர்களை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தியும், காவல் நிலையம் செல்லும் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கொடுக்காமல், விசாரணைக்கு உடன் செல்லும் வழக்கறிஞர்களை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மணல் கொள்ளையர்கள், குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக கூறி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழங்கறிஞர்கள் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழங்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஏடுபட்டனர். அப்போது, திடீரென சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட அவர்கள், மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நேரத்தில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவ்வழியாக சென்றார். அப்போது, காரை நிறுத்திய அவர், வழக்கறிஞர்களிடம் விசாரித்தார். பின்னர், இந்த பிரச்னைக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.