கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ் சென்னையில் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார்.

 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகள் இல்லாதவர். மனம் தளராத தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் வெற்றி நடைபோட்டுவருகிறார். பட்டப்படிப்புவரை தனது படிப்பை முடித்துள்ள பிரணவ், ஓவியம் வரைவதிலும் திறமைசாலி. அண்மையில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக தன்னுடைய நிவாரண நிதியை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பிரணவ் கொடுத்தார். அப்போது, பினராயி விஜயனுடன் தன்னுடை காலை குலுக்கி பிரணவ் எடுத்த செல்ஃபி இந்தியா முழுவதும் வைரலானது.

 
 இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை தனது குடும்பத்தினருடன் பிரணவ் சந்தித்து பேசினார். ரஜினியுடன் தனது கால்களை குலுக்கிய பிரணவ், ஆசையாக செல்பியும் எடுத்துக்கொண்டார். பிரணவிடம் அவருடைய, ஆசை, லட்சியம், எதிர்கால திட்டங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்தார். பிரணவ் கையோடு வரைந்து எடுத்து வந்திருந்த ரஜினி ஓவியத்தை ரஜினியிடம் அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் கால் மணி நேரம் நீடித்தது.