பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத் தெரியும்,ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.பிராமணக் கவிஞர் வாலியின் சமூக நல்லிணக்கச் செய்தி என்ற தலைப்பில் மனித நேய ஜனநாயக கட்சித்தலைவர் தமிழுமுன் அன்சாரி ஒரு கட்டுரையை  சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்அதன்முழுவிவரம் :-

“நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம் முஸ்லீம் பால்தான்!” சொன்னவர் வாலி - “நினைவு நாடாக்கள்” – வாலியின் அனுபவங்கள் ...!
இதோ..வாலியின் வார்த்தைகளில் :“என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே -என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது! இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்? அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் என் தந்தையுடன் பணி புரிந்த ,இப்ராஹிம் என்பவரின்  இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்து இருந்தார்.அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி - இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள். இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்! 

சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி. அவ்வப்போது - கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து -'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் - இதுக்கான காசை, உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று -சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’  திரு.சுல்தான் அவர்கள்! பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் - மனைவி, மகனோடு. சினிமா வருமானம்தானே! முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் -அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள். இப்படி - என் வாழ்வு வடிவு பெற -உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் - முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் !” வாலியை வாசித்தபோது எனக்குத் தோன்றியது...!மத நல்லிணக்கத்தை கட்டிக் காக்கும் மனிதர்கள் , அதை ஒரு கடமையாக செய்யவில்லை..! இயல்பாகவே அவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள் இன்னமும் இருக்கிறார்கள். 

தொடர்கிறார்  வாலி  ”ஒரு நாள் இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதுதான் திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு! அதை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம்! அதைப் படித்த பாதிப்பில்தான் - நான் 'அவதார புருஷ’னை - எழுதப் புகுந்தேன். திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.”என்னது..? மு.மேத்தா ஒரு முஸ்லிமா...? ஆச்சரியத்தோடு கூகிளைத் தேடினேன். ஆம்... மு.மேத்தாவின் முழுப் பெயர் ... முகமது மேத்தா..! மொத்தத்தில் .... வாலி , தன் வாழ்க்கையை சுருக்கமாக இப்படிச் சொல்கிறார் “ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான் , இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!” இன்று ஒரு நல்ல தகவலைத் தந்ததற்கு நன்றி வாலி அவர்களே..!இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும் மனிதநேயம் தமிழ்மண்ணில் என்றும் நிலைக்கட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.