கர்நாடக அரசில், பெரும்பான்மை பலத்தை இழந்து விட்ட முதலமைச்சர் குமாரசாமி தமது பதவியை ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்கும் படி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் 3 மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.

இதையடுத்து 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விமானம் மூலம் மும்பை சென்று, அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். எம்எல்ஏக்களை சமாதானம் செய்து அழைத்து வர காங்கிரஸ் அமைச்சரான டி.கே.சிவக்குமார் நேற்று மும்பை சென்றார்.

ஆனால் அவர்கள், அவரை சந்திக்க விரும்பவில்லை. கர்நாடக முதல்வர் குமாரசாமி, சிவக்குமார் ஆகியோரால் அச்சுறுத்தல் உள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்து 10 எம்எல்ஏக்களும் மும்பை போலீஸ் கமிஷனரிடம் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினர்.

இதைதொடர்ந்து, அவர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு செல்ல முயன்ற டி.கே.சிவக்குமார், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்த சிவக்குமார், விடுதிக்குள் செல்வதில் உறுதியாக இருந்தார்.

மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய் நிரூபம், மிலிந்த் தியோரா ஆகியோரும் சிவக்குமாருடன் இணைந்தனர். தொடர்ந்து, சுமார் 6 மணி நேரம் விடுதி முன் தர்ணா செய்து வந்த சிவக்குமாரையும் உடன் இருந்த தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால், 2 சுயேட்சைகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு, தகுதி இழந்து விட்டதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வேளையில், கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் குமாரசாமி தமது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாகவும், அரசைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால், பெங்களூர் விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் முதல்வர் குமாரசாமி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும், இது அரசியலில் நடக்கும் வழக்கமான சம்பவம் என அவர் கூறினார்.