இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து மத ரீதியான சில கருத்துகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன்மூலம் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் அதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இக்கட்டான சூழலில் மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜாக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
இதுகுறித்து கூறியிருக்கும் அவர், நம் தலைமுறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரசஸ் உள்ளது. இக்கட்டான இந்நேரத்தில் ஜாதி, மதம் மற்றும் இனத்தின் பெயரில் ஒரு பிரிவினையை உருவாக்க கூடாது.  ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் தான் இந்த நோய் தொற்று பரவுகிறது என்ற தவறான செய்தியை நாம் பரப்ப கூடாது.

மதத்தை வைத்து பிரச்சனை உருவாக்க வேண்டாம்- சத்குரு வேண்டுகோள்

உலகமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதைவிடுத்து, மதத்தை வைத்து சமூகத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்க கூடாது. இந்த வி‌ஷயத்தில் நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும் விழிப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படாமல், சிறிய அளவிலேயே இந்த பிரச்சனையை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.