சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும்தான் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 

குறிப்பாக, திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவத் தேவை போன்றவை தவிர மற்ற பயணங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யவேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து, கடந்த 17ம் தேதி  முதல் விண்ணபித்த அனைவருக்கும் இபாஸ் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சென்னை வர தொடங்கியுள்ளனர். இதனால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கட்டுக்குள் இருந்து வரும் கொரோனா நோய் தொற்று பிற மாவட்டங்களில் இருந்து வருபர்களால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.