திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாடுகள் சுதந்திரமாக திரிவதால், மனு கொடுக்க வரும் கிராம மக்கள் அலுவலகத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். கால்நடைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து துறை அலுவலகங்களும் இயங்கி வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அலுவலக வளாகத்தில் ஏராளமான மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் அலுவலகத்துக்குள் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை துரத்துகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளே வரவேண்டியுள்ளது.

கால்நடைகள் அலுவலக வளாகத்துக்குள் நுழையாமல் இருக்க அலுவலகத்துக்கு செல்லும் மூன்று நுழை வாயில்களிலும் இரும்பு பைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நுழைவாயில்களில் அவை மண்குவியலால் தூர்ந்து விட்டதால் எளிதில் மாடுகள் உள்ளே சென்றுவிடுகிறது.

எனவே, மாடுகள் முட்டி உயிர்பலி ஏற்படுமுன், அனைத்து நுழைவாயில்களிலும், இரும்பு பைப் பொருத்தப்பட்டுள்ள இடங்களில், மண் அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.