திருமண வரவேற்பின் போது காதலியுடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட மணமகனின் அந்தரங்க வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சென்னை போரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இருவீட்டு சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 10-ம் தேதி கே.கே.நகரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் 9-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது, மணமகள், வருங்கால கணவருடன் செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். அப்போது, வாட்ஸ்அப்பில் 30-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் குவிந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் உடனே மணமகனிடம் அதை காட்டி என்ன இது என்று கேட்டுள்ளார். 

அதற்கு மணமகன், பதில் அளிக்க முடியாமல் மவுனமாக இருந்தார். உடனே மணமகள் தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள் திகைத்து போனார்கள். திருமணம் பாதியில் நின்றதால் மணமகள் வீட்டார் நாங்கள் செய்த செலவுகளை உடனே தரவேண்டும் என்று கூறி மணமகன் பெற்றோரிடம் தகராறு ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். 

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் மணமகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மணமகன் அவரது வீட்டின் அருகில் உள்ள இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும், இருவரும் நெருக்கமாகவும் வீடியோ எடுத்துள்ளனர். வசதி குறைவான பெண் என்பதால் மணமகன் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை தற்கொலை செய்துகொள்வோம் என பெற்றோர் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மணமகன், வேறு வழியின்றி பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறியுள்ளார். இளம்பெண் சரியான நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.