கடந்த 2018ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில், இந்தியாவில் இருந்து முறையாக முதலீடு செய்யப்பட்ட தொகை, 6 சதவீதம் சரிந்துள்ளதாக, அந்நாட்டு வங்கிகளின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், முறையாக செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து, அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுஉள்ளது.

அதில், உலகம் முழுவதும் இருந்து கடந்த 2018ம் ஆண்டு, சுவிஸ் வங்கிகளில், ரூ.99 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, வழக்கத்தை விட, 4 சதவீதம் சரிந்துஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘

மேலும், இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, நேரடியாக சுவிஸ் நாட்டு வங்கியிலும், இந்தியாவில் கிளைகளை கொண்ட மற்ற வங்கிகளிலும், ரூ.6,757 கோடி, 2018ம் ஆண்டு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த புள்ளி விவரம், 6 சதவீதம் குறைவு எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில், 2வது முறையாக, இப்படியொரு சரிவு ஏற்படுவதாக நிபுணர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.