மருத்துவ சேவைகளின் மதிப்பு உணரப்படவில்லையென்றால், மருத்துவர்கள் தங்கள் வீடுகளில் இருந்துகொள்வது மிக சுலபமான காரியம் என்று அகில இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மக்கள் தெரிவித்து போராட்டம் நடத்திய விஷயத்தில் இந்திய மருத்துவ சங்கம் தனது கடுமையான கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ராஜன் ஷர்மா, கவுரவ பொதுச் செயலாளர் ஆர்.வி. அசோகன் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். “சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதும் இறந்த மருத்துவர்கள் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டிருப்பது கவலைக்குரியது. இதைத் தடுப்பதில் மாநில அரசின் கையாலாகாத்தனம் அதை விட அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லையெனில் அரசாள்வதற்கான தார்மீக உரிமையை அரசுகள் இழக்கின்றன. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்ற போதும் இந்திய மருத்துவ சங்கம் அமைதி காத்தது.
எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு. திட்டுவது, வன்முறை, எச்சில் துப்புவது, கல் எறிவது, வசிப்பிடங்களில் நுழையவும் தங்கவும் தடை என எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்தோம். இறப்பில் கண்ணிய மறுப்பு என்பது உட்சபட்ச அவமதிப்பு. எந்த நாடும் தனது ராணுவத்தை ஆயுதங்கள் இல்லாமல் போருக்கு அனுப்பாது உரிய கவச உடை உபகரணங்கள் இல்லாமல்தான் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனாவை எதிர்த்து அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் மக்களை பாதுகாத்து இளமையிலேயே மருத்துவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த சேவைகளின் மதிப்பு உணரப்படவில்லை என்றால், தங்கள் வீடுகளில் இருந்துகொள்வது மருத்துவர்களுக்கு மிக சுலபமான காரியம். அதற்கு இந்தச் சமூகம்தான் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். எனவே மாநில அரசுகள் உரிய அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என எச்சரிக்கிறோம். அதை செய்ய தவறினால் மருத்துவ சமூகத்தின் உரிமை காக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.” என்று தெரிவித்துள்ளனர்.