சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய சட்டங்கள், தீர்ப்புகள் குறித்து இளம் வக்கீல்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில், தொடர் கற்றலுக்கான அமைப்பாக எம்.பி.ஏ. அகாடமியை (மெட்ராஸ் பார் அசோசியேஷன்) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாஹில் ரமானி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செயலாளர் எம்.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தலைமை நீதிபதி பேசியதாவது:- மெட்ராஸ் பார் அசோசியேஷன் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளாகிறது. இதன் உறுப்பினர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தை இயற்றவும் உதவியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்வேறு சட்ட புத்தகங்கள், தீர்ப்புகளை மின்னணு முறையில் எளிதில் பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சட்டத்தில் ஏற்படும் திருத்தங்களையும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் அப்போதைக்கப்போது தெரிந்துகொள்ள வேண்டிய கடமை நீதிபதிகள், மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் உள்ளது.

தொடர் கற்றல் மூலம் மட்டுமே திறமையை வளர்த்து போட்டியை சமாளிக்க முடியும். தேசிய நிதித்துறை அகாடமிக்கு இணையாக புதிய சட்டங்களை பற்றி வக்கீல்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு வக்கீல்கள் சங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் மையமாக எம்.பி.ஏ. அகாடமி இருப்பது சிறப்பு என்றார்.

அகாடமி குறித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் வக்கீல்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வழக்குகளும், நடவடிக்கைகளும் வந்துகொண்டே இருப்பதால் அதற்கான விழிப்புணர்வு மக்களிடையே இருக்க வேண்டும். மாணவர்களுக்கும், வக்கீல்கள் சமுதாயத்திற்கும் ஒரு சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.