பெரம்பூர் முதல் ரெட்டேரி வரை சாலையின் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மறுசீரமைக்க  உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி சாலையை ஆக்கிரமித்திருந்தவர்களுக்கு மாநகராட்சியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த சாலையில் தான் 120 ஆண்டுகால பழமையான தண்டு மாரியம்மன் கோவில் இருக்கிறது. தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என பலர் இந்த கோவிலில் வழிபட்டு செல்வது வழக்கம். சாலை விரிவாக்கத்திற்காக இந்த கோவிலையும் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.

பகல் நேரத்தில் கோவிலை இடித்தால் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அதிகாலையில் அகற்ற திட்டமிட்டனர். அதன்படி நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் உதவி கமிஷனர்கள் சுரேந்தர், விஜய் ஆனந்த், செம்பேடு பாபு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

மாநகராட்சியின் திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி ஆலன் சுனேஜா தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 2 லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் கோவிலில் இருந்த மாரியம்மன் சிலை மற்றும் பிற சிலைகள் பத்திரமாக அகற்றப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக கோவில் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கோவில் இடிக்கப்படும் செய்தி அறிந்து அந்த பகுதி மக்கள் பெருமளவில் திரண்டனர். அவர்கள் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அகில இந்திய இந்து சத்தியசேனா அமைப்பினர் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலை இடித்து அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். காவல்துறை அந்த அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

அகற்றப்பட்ட சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.