தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று 776 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 8,795 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 5,681 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 

இதனிடையே அதிர்ச்சி தரும் செய்தியாக சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 135 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 48 பேரும், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 34 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 23 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 பேரும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளாக கண்றியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ குழுவின் ஆலோசனைபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களில் 1085 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் இருப்பவர்களையே கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.