கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக சுமார் 4000க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் வெறும் 69 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஊரடங்கின் நோக்கத்தை உணராமல் சமூக விலகலை கடைபிடிக்காத நிலையிருந்தாலும், பெரும்பாலானோர் ஊரடங்கை முறையாக கடைபிடித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள சென்னையில், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்க யாரும் கோயம்பேட்டிற்கு வராமல் இருப்பதற்காக நடமாடும் காய்கறி கடைகள் உள்ளன. சென்னை மாநகராட்சி நிர்வாகமும், யாரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழுவினர், சென்னைவாசிகளுக்கு காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைக்க செல்ஃபோன் எண்களை வழங்கியுள்ளனர். அந்த எண்களுக்கு தொடர்புகொண்டு அல்லது ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவற்றில் ஆர்டர் செய்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்.

73050 50541, 73050 50542, 73050 50543, 73050 50544  ஆகிய எண்களில் காய்கறிகள், பழங்களை ஆர்டர் செய்யலாம். www.cmdachennai.gov.in என்ற இணையதளம் மூலமும் காய்கறிகள் தொகுப்பை ஆர்டர் செய்து பெறலாம். மேலும் சுமார் 15 வகை காய்கறிகள் கொண்ட தொகுப்பை Swiggy, zomato, dunzo மூலமும் ஆர்டர் செய்து பெறலாம். எனவே சென்னைவாசிகள் யாரும் காய்கறி வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வர தேவையில்லை.