என்னுடைய மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை. அவரை கொலை செய்திருக்கலாம் என்று பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைக்கு பேராசியர்கள் காரணம் என்று மூன்று பெயரைக் குறிப்பிட்டிருந்தார் பாத்திமா. குறிப்பாக சுதர்சன் என்ற பேராசிரியர் முக்கிய காரணம் என்று பாத்திமா குடும்பத்தினர் புகார் கூறினர். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இ ந் நிலையில் பாத்திமாவின் தந்தை லத்தீப் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தியைச் சந்தித்தார். அப்போது லத்தீப்பிடம் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளார்களை லத்தீப் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய மகளின் மரணம் தொடர்பான விசாரனையை ஈஸ்வரமூர்த்தி மேற்கொள்வது திருப்தியாக உள்ளது. முதலில் கோட்டூர்புரம் போலீஸ் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. என்னுடைய மகள் பாத்திமாவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை. அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் 13 சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதை வைத்துதான் எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறேன்.


பாத்திமா இறந்த அறையை கோட்டூர்புரம் போலீஸ் முறையாக ஆய்வு செய்யவில்லை. தடயங்களையும் சேகரிக்கவில்லை. செல்போன், லேப்டாப் ஆகியவற்றை தொடக்கத்திலேயே எடுத்துச்சென்று ஆய்வு செய்யவில்லை. குறைந்தபட்சம் சம்பவம் நடந்த அறையை சீல்கூட வைக்கவில்லை. எனது மகளுடன் தங்கியிருந்த மாணவி அன்றைய தினம் எங்கே இருந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
அன்றைய இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதைப் பற்றியும் எதுவும் விசாரிக்கவில்லை. சிசிடிவி கேமராக்களையும் போலீஸார் ஆய்வு செய்யவில்லை. இந்த வழக்கில் இப்படி நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. பாத்திமா தற்கொலை செய்துகொண்டதற்கான எந்த அறிகுறியும் எனது மகள் உடலில் இல்லை. எனவே இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்” என்று லத்தீப் தெரிவித்தார். பாத்திமா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவருடைய தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.