“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மட்டன், சிக்கன்லாம் சாப்பிட முடியாது..” திமுக பிரமுகர் பிரச்சாரம்..
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம ஆட்டுக்கறியும் சாப்பிட முடியாது, மாட்டுக்கறியும் சாப்பிட முடியாது. கோழிக்கறியும் சாப்பிட முடியாது என்று திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை திமுக வேட்பாளர் நேற்று திருவிக நகர், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கலாநிதி வீராசாமியை ஆதரித்து திருவிக நகர் பகுதி செயலாளர் தமிழ் வேந்தன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “ மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம ஆட்டுக்கறியும் சாப்பிட முடியாது, மாட்டுக்கறியும் சாப்பிட முடியாது. கோழிக்கறியும் சாப்பிட முடியாது. தயிர் சாதம், புளி சாதம்,, சாம்பார் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும். மாரியம்மன் கோயிலில் எல்லாம் கூல் ஊற்றி, படையல் போட்டு சாப்பிட முடியாது.” என்று பேசுகிறார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து பேசிய திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி “ நீண்ட நாள் பிரச்சனையான கணேசபுர சுரங்கப்பாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே கட்டுமான மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், அரசுப் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களுக்கு காலை உணவு திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. வாக்கு சேகரிப்புக்கு செல்லும் போது உற்சாக வரவேற்பு அளிப்பதன் மூலம் அது தெரிகிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றக்கூடிய ஒரே கட்சி திமுக தான். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பறிப்பார். எனவே சிந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.