சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புது ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி டி.எஸ் அன்பு நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று ஒன்று எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு பிரிவு இருப்பது நம்மில் பலருக்கு பொன் மாணிக்கவேல் இந்த பிரிவுக்கு வந்த பிறகு தான் தெரியும். கடந்த மூன்று ஆண்டுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய பொன் மாணிக்கவேல் இந்த பிரிவுக்கு என்றே ஒரு மிகப்பெரிய கவுரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

முன்பெல்லாம் சிலைகள் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும். அதிலும் சிலையை வெளிநாடுகளுக்கு கடத்துவதை குடிசைத் தொழில் போல் பெரும் தொழில் அதிபர்கள் சிலர் செய்து வந்தனர். அப்படி செய்து வந்த மூன்று முக்கிய நபர்கள் சிறையில் தற்போது வரை இருக்க காரணம் பொன் மாணிக்கவேல் தான். அவர் பெரிய அளவில் சிலைகளை மீட்கவில்லை என்று கூறுவார்கள். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் மீட்க அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தன்னால் முடிந்த அளவிற்கு பொன் மாணிக்கவேல் சிலைகள் மீட்பில் துரித நடவடிக்கைகள் எடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் ஒப்படைத்ததன் பின்னணியில் பொன் மாணிக்கவேலின் கடுமையான உழைப்பு இருந்தது.

இதே போல் விரைவில் டெல்லி வரும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மேலும் 2 சிலைகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளார். அந்த இரண்டுமே தமிழக கோவில்களுக்கு சொந்தமானவை. இந்த சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு மீட்கப்பட்டதும் பொன் மாணிக்கவேலின் புண்ணியத்தில் தான். இப்படி தமிழகத்தின் கலை பொக்கிஷங்களை அடுத்தடுத்து மீட்டுக் கொடுத்த பொன் மாணிக்கவேல் இனி சிலை கடத்தல் விவகாரங்களில் தலையிட முடியாது.

சிறப்பு அதிகாரிக்கான பதவிக்காலம் முடிந்த நிலையில் அதனை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் தான் திடீரென ஐபிஎஸ் அதிகாரி அன்புவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக தமிழக அரசு நியமித்துள்ளது. கடந்த ஆண்டே பொன் மாணிக்கவேல் ஐஜி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால் ஓராண்டாக அந்த பொறுப்புக்கு யாரையும் தமிழக அரசு நியமிக்கவில்லை.

இந்த நிலையில் சிலை கடத்தல் சிஐடி பிரிவு ஐஜி என்று புதிதாக ஒரு பதவியை உருவாக்கி அதற்கு அன்புவை ஐஜியாக நியமித்துள்ளனர்.  இவர் மயிலாப்பூர் டிசியாக இருந்த போது அனைவருக்கும் அறிமுகமானவர். ஜல்லிக்கட்டு போட்டி மெரினாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போராட்டக்காரர்களை கட்டுக்கோப்பாகை வைத்திருந்ததில் இவர் பங்கு பெரியது. அதே சமயம் தடியடி கலவரம் என்று எல்லை மீறிய போதும் அன்பு துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

மேலும் மெரினா போராட்டம் முடிவுக்கு வர காரணமான ஒரு நடிகரின் மற்றும் இசை அமைப்பாளரின் பேட்டி அன்புவின் மேற்பார்வையில் உருவானது தான் என்று கூட சொல்வார்கள். அப்போது ஓபிஎஸ்க்கு நெருக்கமாக இருந்த அன்பு பிறகு எடப்பாடி தரப்பில் நெருங்கி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக தற்போது அமர்ந்துள்ளார்.