பணிக்காலம் முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்பதற்காக பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இன்று அவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தமிழக அரசு அவருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், “சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து பொன்.மாணிக்கவேல்;- சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க என்னை நீதிமன்றம் தான் நியமித்தது. இதனால், அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது. வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்ததை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை அரசு காத்திருக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.