சென்னை தாம்பரம் அருகே இருக்கும் எருமையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ரேணுகா.இவர்களுக்கு திருமணம் முடிந்து 32 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு விஜய், சதீஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரவி சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ரவி தனது மனைவி ரேகா மீது மிகுந்த பாசத்தோடு இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரேகா கடந்த 2006 ம் ஆண்டு  உயிரிழந்திருக்கிறார். மனைவி மீது உயிரையே வைத்திருந்த ரவிக்கு அவரது இழப்பு அதிகமான மனவேதனையை தந்திருக்கிறது. அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவி, "அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டாலும் உடனே பேசி விடுவோம். ஆனால் இன்று அவர் இல்லாத நிலையில் நானும் இறந்திருக்க வேண்டும். என் இரண்டு மகன்களின் நலன் கருதி உயிரோடு வாழ்ந்து வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ரேகா உயிருடன் இருக்கும் போது சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆனால் அப்போதிருந்த நிலைமையில் ரவியால் அது முடியாமல் போயிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவரது மனைவிக்காக கோவிலே கட்டியிருக்கிறார் ரவி. அந்த கோவிலில் பளிங்கு கல்லில் ரேகாவின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேகா அம்மான் திருக்கோவில் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த கோவிலில் ரவியும் அவரது மகன்களும் தினமும் வழிபட்டு வருகின்றனர். சொந்த வீட்டில் வாழ முடியாமல் போனாலும் சொந்த நிலத்தில், கோவிலில் தெய்வமாக ரேகா வாழ்ந்து வருவதாக அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

மும்தாஜ் நினைவாக ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டியதை போல, தமிழ்நாட்டில் தனது மனைவி ரேகாவிற்கு ரவி கட்டிய கோவிலும் அவருக்கு தாஜ் மஹால் போன்றதே.