கருணாநிதியின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடக்கிறது. மாலையில் கலைஞர் சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கருணாநிதியின் முதலாம் நினைவு நாள் நாளை (ஆகஸ்ட் 7ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அன்று காலை 8 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து, கருணாநிதி நினைவிடம் நோக்கி மாபெரும் அமைதி பேரணி நடக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வக்கிறார். மாலை 5 மணியளவில், மு.க.ஸ்டாலின், "முரசொலி" அலுவலக வளாகத்தில், "அமர்ந்த நிலையில் எழுத்தோவியம் தீட்டுவது போன்ற எழுச்சித் தோற்றத்தில்" நிறுவியுள்ள கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

விழா நிறைவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஆகஸ்ட் 7 அன்று, திசையெலாம் திணறிட, பெருந்திரளாக சூழ்ந்து வந்து பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்" என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.