சென்னை மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் அருகே சாமி நகரில் பல லட்சம் செலவில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் நல தங்கும் விடுதி கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதைதொடா்ந்து, அதற்கான பணிகள் தொடங்கி, முடிக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் இந்த விடுதியை திறந்து வைத்தார்.

ஆனால், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதி இதுவரை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்குள்ள சமையல் பாத்திரங்கள், மேஜை, நாற்காலிகள், மின்விசிறிகள் ஆகியவை பயன்படுத்தாமல் பாழாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த விடுதியை மாணவர்களின் பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால் அதிகாரிகள், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாணவர்கள் விடுதி பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த விடுதிக்கு அருகில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. மேலும் சமூக விரோதிகள் சிலர் இந்த விடுதிக்கு அருகில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து மது அருந்துகின்றனர்.

இதனால் இவ்வழியாக தனியாக நடந்து செல்லும் பெண்கள் கடும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மக்களின் வரி பணத்தில் கட்டப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை, சமூக நலத் துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வீணாகிறது.

எனவே இந்த விடுதியை மாணவர்கள் தங்கும் வகையில் பயன்பாடுக்கு கொண்டு வரவேண்டும். விடுதிக்கு அருகில் லாரிகள் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அதிகாரியிடம் கேட்டபோது,  மாதவரம் 2016ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த விடுதி கட்டப்பட்டது. தற்போது இது சென்னை மாவட்டமாக மாறியுள்ளது. ஆனால் இந்த விடுதி குறித்த ஆவணங்கள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இப்போதுதான் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.