சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று! பீதியில் பொதுமக்கள்!
சீனாவில் உருவான HMPV வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலில் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலக நாடுகளை அலறவிட்டது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் சீனாவில் மனித மெட்டாப்நிமோனியா வைரஸ் அதாவது HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ் ஆபத்தானதா?
இந்நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோயெதிர்ப்பு சோதனையில் HMPV வைரஸ் கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இதையும் படிங்க: வேகமாக பரவும் HMPV வைரஸ்.. அடுத்த ஆபத்தா? என்னென்ன அறிகுறிகள்.. நோயை எப்படி தடுப்பது?
இந்நிலையில் தற்போது சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: HMPV பரவல்; சீனாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா? சீன அதிகாரிகள் சொன்ன தகவல்!
இதனிடையே கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.