தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகம் முழுவதும் அமைத்துள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. 

கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனங்கள் இயங்க தடையில்லை என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதையடுத்து தேசிய  நெடுஞ்சாலைகளில் மார்ச் 25ம் தேதி முதல் சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  இன்று முதல் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 3 வரை 5 சதவீதம் வரை சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் சுமந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கட்டணங்களை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இன்று முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை அதிகரித்துள்ளது. 

சென்னை தடா சாலையில் உள்ள நல்லூர், தாம்பரம் - திண்டிவனம் சாலையில் உள்ள ஆத்தூர், தாம்பரம் - திண்டிவனம் சாலையில் உள்ள பரனூர், சூரப்பட்டு சென்னை பைப்பாஸ், வானகரம் சென்னை பைப்பாஸ், ஒசூர் - கிருஷ்ணகிரி, திருச்சி - காரைக்குடி சாலையில் உள்ள லால்குடி, கிருஷ்ணகிரி-வாலாஜாப் பேட்டை சாலையில் உள்ள் பள்ளிக்கொண்டா, தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் உள்ள பழைய கந்தவர்கோட்டை உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஊரடங்கு காரணமாக குறைவான எண்ணிக்கையிலான லாரிகள் மட்டுமே இயக்கப்படும் இந்த சூழ்நிலையில் கட்டணம் உயர்ந்த்தப்பட்டது லாரி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஒரு லாரிக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை வாடகை உயரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்வால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.