பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை சாலைகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபர் கிண்டியில் இருக்கும் ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார். மாலை 4 மணியளவில் அவர் மாமல்லபுரம் புறப்படும் சமயத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் இருக்கும் கிண்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பிவிடப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று மாலை 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் இரவு வெகுநேரம் காத்திருந்து தாமதமாக சென்றனர். சீன அதிபர் மீண்டும் சென்னை நட்சத்திர விடுதிக்கு திரும்பிய பிறகே போக்குவரத்து இயல்பு நிலையை அடைந்தது.

 

 பெருங்குளத்தூரில் இருந்து சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கப்படவில்லை. மாறாக மதுரவாயல் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அதேபோல முட்டுக்காடு பகுதியிலும் போக்குவரத்து முடக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இன்று காலையில் சீன அதிபர் மீண்டும் மாமல்லபுரம் கிளம்பிய போதும் இந்த பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். ரயில் மற்றும் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.