3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வேலை பார்க்கும் பலர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியதால் நேற்று மாலைக்கு மேல் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள், நகரங்களில் இருந்து மக்கள் வேலைக்காக தலைநகரான சென்னையில் வசிக்கின்றனர். வார இறுதி நாட்கள், அரசு விடுமுறைகள், பண்டிகைகள் போது சொந்த ஊர்களுக்கு இவர்கள் சென்றுவருவது வழக்கம். அப்படி விடுமுறைகளின் போது மக்கள் மொத்தமாக கிளம்புவதால் அந்த நேரங்களில் சென்னை நகரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்.

அதே போன்ற சம்பவம் நேற்றும் நடந்தது.சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை என்பதால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று கிளம்பினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

பேருந்துகள் மட்டுமின்றி மக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும் ஊர்களுக்கு கிளம்பியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்று மாலையில் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

பெருங்குளத்தூரிலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்டது. பேருந்துகள் சென்னையில் இருந்து வெயியேற சுமார் 2 மணி நேரம் ஆனது.

இதுபோக தனியார் பேருந்துகளில் கட்டணமும் அதிகம் உயர்ந்திருந்தது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் 1500, 2000 ரூபாய்க்கு மேல் டிக்கெட்கள் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.