காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.  இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் மேக மூட்டம், சாரல் மழை என தொடர்ந்தது. இதை சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் தொடங்கிய மழை 10 நிமிடங்கள் மட்டுமே பெய்தது. இதனால் பலத்த மழையை எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல காலையில் அதிக வெயில் சுட்டெரித்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


 

இதேபோல் வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்பட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதேநேரத்தில் விவசாய பணிகளை உற்சாகத்துடன் தொடங்கவும், ஏரிகள் நிரம்பும் அளவுக்கு பலத்த மழை பெய்ய வேண்டும் என விவசாயிகளும், இன்னும் அதிகளவில் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என பொதுமக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.