தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இரவில் புழுக்கம் தாங்காமல், மொட்டை மாடியில் உறக்கத்தை கண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னை நகர் முழுவதும் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் ஊர்ந்து சென்றன.

இதையொட்டி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவக் காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் நகர் பகுதிகளில் 9 சென்டி மீட்டரும், தர்மபுரி மாவட்டம் அரூரில் 8 சென்டி மீட்டரும், மழை பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை, விருதுநகர், நாகை மற்றும் மதுரை மேட்டுப்பட்டியில் தலா 5 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.