நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில்;- வங்ககடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாட்டின் தென்பகுதிகளில் பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. 

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ., சின்னக்கல்லாரில் 6 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாரில் 4 செ.மீ.,  கூடலூர் பஜாரில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், தெற்கு தீபகற்ப பகுதிகளில், தென் மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.