Heavy Rain In Chennai: சென்னையின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னையின் நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போன்று சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் பெரம்பூர், கோடம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மூலக்கடை, திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திடீர் கனமழை காரணமாக பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்பொழுது பெய்து வரும் கனமழையானது மாலை 6 மணி வரை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.