வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பயிருக்கும் அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து இருக்கிறது. இதேபோல கேரளாவின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்திருக்கிறது. லட்சத்தீவு, கர்நாடகா, தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்திருக்கிறது.

இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

 கடந்த 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 4  சென்டி மீட்டர் மழை பதிவாகியது. மயிலாடி, திருத்துறைப்பூண்டி, சேரன்மகாதேவி, பாப்பிரெட்டிப்பட்டி, உடுமலைப்பேட்டை, ராமேஸ்வரம், கரம்பக்குடி ஆகிய பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.