கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடும் வறட்சி ஏற்பட்டு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி பாலைவனமாக மாறின.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இதையொட்டி வேலூரில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று மதியம் 98.1 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது.
காட்பாடி, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வாலாஜா, அம்முண்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

3 நாட்கள் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீர் குறைவாக இருந்த கிணறு போர்வெல்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.