தமிழகத்தில் கடந்த 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரமடையும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வங்ககடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகரவுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து,  கிழக்கு, வடகிழக்கு நோக்கி நகர இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல்,  கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு நகரில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில்  மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 2 நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது தொடர் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைக்காரணமாக முக்கிய அணைகள் வேகமாக நிரப்பி வருகின்றன. இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.