வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்னையை சுற்றியிருக்கும் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில்,  சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி,  கோடம்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெயில் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர்,திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.